மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ரூ.44.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

Update: 2023-01-23 13:30 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 28 நபர்களுக்கு ஆட்சியர் ஆர்த்தி பட்டா வழங்கியபோது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா.

காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.44.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சிியர் ஆர்த்தி  வழங்கினார்கள். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆர்த்தி  தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 255 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு இன்று  உத்தரவிட்டார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருப்பெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் குறுவட்டம் கண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.5,65,500/- மதிப்பில் SECC திட்டத்தில் வீட்டுமனை பட்டாக்களையும், காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட திருப்புக்குழி, சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ 38,97,400/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி செல்வி கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தார் . அதில்,  நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். ஆற்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக மக்கள் பணி ஆற்றி வருகிறேன். நான் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர். மேற்படி எங்கள் கிராமத்தில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 3 தலைமுறைகளாக தற்போது 60 குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகிறோம்.

இதில் இன்றுவரை எங்கள் பெயரில் பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே, 1990-ம் ஆண்டு எங்கள் பகுதி மக்கள் சிலபேர் பெயரில் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் தோராய பட்டா வழங்கப்பட்டது. அது இன்றுவரை கிராமக் கணக்கில் ஏற்றப்படாமல் இருந்து வருகிறது.  இந்நிலையில் மீண்டும் அதே நபர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு மீண்டும் தோராய பட்டா வழங்கப்பட்டது. அப் பட்டாவும் இன்றுவரை கிராம கணக்கில் ஏற்றப்படாமல் இருந்து வருகிறது.

எனவே, மேற்படி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை கிராமக் கணக்கில் பதிவேற்றம் செய்து கணிணி பட்டா வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார். இதேபோல், பள்ளி மாணவியின் பெயர் திருத்தம் மேற்கொள்ள கூறி பெற்றோர் மனு அளித்தார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News