மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரத்தில் கட்டண வாகன நிறுத்துமிடம் திறப்பு

காஞ்சிபுரத்தில் காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர்.

Update: 2023-08-22 05:00 GMT

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் கட்டண வாகன நிறுத்தும் இடத்தினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ் பி சுதாகர்  ஆகியோர் திறந்து வைத்தனர் 

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான இடத்தில் கட்டண வாகன நிறுத்தும் இடத்தினை ஆட்சியர் மற்றும் எஸ்.பி தொடங்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகருக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் திருக்கோயில் மற்றும் பட்டுப் புடவைகள் வாங்க காஞ்சிபுரம் வருகை புரிகின்றனர்.தமிழகம் மட்டும் இல்லாது கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில நபர்களும் பட்டு சேலை மற்றும் திருக்கோயில்களை சுற்றிப்பார்க்க வருவதால் காஞ்சிபுரம் நகரில் கடும் போக்குவரத்து நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும் திருமண நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண பல்வேறு வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எஸ்பி சுதாகர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு இடங்களை நகரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் முதல் கட்டமாக காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கடகிரி தோட்டம் என அழைக்கப்படும் பகுதியை தேர்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சீரமைப்பு பணியினை இந்து சமய அறநிலைத்துறை மேற்கொண்டு இன்று முதல் கட்டண முறையில் பார்க்கிங் தளம் அமைக்கப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் எஸ் பி சுதாகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறுகையில், காஞ்சிபுரம் நகரில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பொதுமக்கள் தொடர் புகார் கூறி வந்த நிலையில் சாலைகள் வளைவுகள் அதிகம் காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை அறிந்து திருக்கோவிலுக்கு சொந்தமான பகுதிகளை கண்டறிந்து அதற்கான பணிகளை துவக்கி இன்று முதல் கட்டமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டண வாகன நிறுத்தமிடம் திறக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சுற்றியுள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் வாகன பார்க்கின் குறித்த 3D முறையில் க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு அதன் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தி நிறுத்திக் கொள்ளலாம் .

மேலும் வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் என குடிநீர் கழிவறை தங்குமிடம் ஆகிய அனைத்தும் இப்பகுதியில் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.முதற்கட்டமாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் இத்திட்டம் காஞ்சிபுரம் பொது மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் கள் விஜயகுமார், ஜெகநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலக பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News