விதிகளை மீறி கட்டப்பட்ட ரூ1.5 கோடி மதிப்பிலான வீடு இடிப்பு

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட ரூ1.5 கோடி மதிப்பிலான வீடு இடிக்கப்பட்டது.

Update: 2022-06-28 07:30 GMT

காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறை விதிமுறைகளை மீறியதாக இடிக்கப்படும் வீடு.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் அருள்ஜோதி. காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி உள்ளார்.

இந்நிலையில் அருள்ஜோதியின் பக்கத்து வீட்டுக்காரரான குப்புசாமி என்பவர் அருள் ஜோதி தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடி இடத்தையும் சேர்த்து வீடு கட்டியுள்ளதாக புகார் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் அருகே 300 மீட்டர் தொலைவில் எந்த ஒரு கட்டிடத்தை கட்டினாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனும் விதி உள்ள நிலையில், அருள்ஜோதி தொல்லியல் துறையிடமும், மாநகராட்சி நிர்வாகத்திடமும் உரிய அனுமதி பெறவில்லை என தெரிகிறது.

இது குறித்தும் குப்புசாமி தனது வழக்கில் குறிப்பிட்டுள்ள நிலையில், கடந்த 2010 ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த வீட்டை இடிக்க தொல்லியல் துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களும், தொல்லியல் துறை அலுவலர்களும், காவல்துறை பாதுகாப்புடன் வந்து அருள் ஜோதியின் வீட்டை இடிக்க துவங்கி உள்ளனர்.

கட்டிய வீடு கண்ணெதிரிலேயே அடிக்கப்படுவதைக் கண்டு அருள்ஜோதி குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News