காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் 20 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-09-16 04:58 GMT

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் பட்டாளதெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உணவு அருந்திய மாணவ மாணவிகள்

தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் 20 துவக்கப் பள்ளிகளில் இத் திட்டம் இன்று காலை துவக்கப்பட்டது.

சின்ன காஞ்சிபுரம் பட்டாளத் தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியில் பயிலும் 119 மாணவ மாணவிகளுக்கு இனிப்புடன் கூடிய காலை உணவினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் , மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,  துணை மேயர் குமரகுருநாதன்  ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்பட்டு 20 பள்ளிகளில் பயிலும் 1580 மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. உணவு தயாரிப்புக்காக ஒரு மாணவருக்கு 12 ரூபாய் 50 காசுகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி , மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,  காஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி குமார் , மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர் சந்துரு,  கமலக்கண்ணன்,  சுரேஷ்,  குமரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் பட்டாளதெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உணவு அருந்திய மாணவ மாணவிகள்.

Tags:    

Similar News