புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறக்கக் கோரி பாஜகவினர் 2மணி நேரம் சாலை மறியல்

பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழாவிற்க்காக பாஜக கொடி நடப்பட்டதால், திமுக எம்எல்ஏ கடை திறப்பு விழாவை தவிர்த்தார்.

Update: 2022-07-11 10:15 GMT

புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை திறக்காததால் பாஜகவினர் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் கீழ்ரோடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைசி எல்லை பகுதியான 46 வது வார்டு பகுதி ஓரிக்கை வசந்தம் நகர். வளத்தோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் கோரிக்கையில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் இப்பகுதி பொதுமக்கள் பொருட்களை வாங்கி வந்தனர்.

சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் என்பதால் வசந்தம் நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க கோரிக்கை வைத்த நிலையில் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசையப்பர் தனது கணவரின் இடத்தை இலவசமாக அளித்தும் நியாய விலை கடைக்கு தேவையான தளவாடப் பொருட்களை இலவசமாக அளிப்பதாக எழுதிக் கொடுத்ததன் பேரில் இன்று திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.

மாமன்ற உறுப்பினர் கயல்விழி பாஜகவினை சேர்ந்தவர் என்பதால் அவர் சார்பாக திறப்பு விழாவிற்கு வழியெங்கும்  பாஜக கொடி நடப்பட்டது.

திறப்பு விழாவுக்கு வருவதாக இருந்த உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான க. சுந்தர் இதை அறிந்து திறப்பு விழாவை தள்ளி வைப்பதாக அறிவித்ததால் காத்திருந்த அனைவரும் ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து பாஜக மாவட்ட செயலாளர் பாபு மற்றும் பொருளாளர் பாஸ்கர் , கயல்விழி சூசை தலைமையில் பாஜகவினர் காஞ்சிபுரம் உத்திரமேரூர் கீழ் ரோடு சாலையில் குருவிமலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியலில் காவல்துறை பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் குடிமை பொருள் அதிகாரிகள் வராததால் கடும் போக்குவரத்து நிலவியது.

அதன்பின் வந்த காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி நாளை காலை 10 மணிக்கு திறப்பாவதாக அறிவித்ததை ஏற்காமல் மீண்டும் சாலை மறியலில் தொடர்ந்ததால் காவல்துறை அவர்களை கைது செய்து  திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நியாய விலை கடையை திறக்காமல் திமுக  கட்சிக்கொடி இல்லை என்பதால் திறக்க மாட்டேன் என கூறியதாக தகவல் பரவியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News