ஈரோட்டில் மலைக் கிராம பள்ளிகள் தரம் உயா்த்தப்படாததால் மாணவா்களின் கல்வி பாதிப்பு : கிராம மக்கள் வேதனை
ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரத்தை உயா்த்த மக்கள் பங்களிப்புத் தொகை செலுத்தி பல ஆண்டுகளாகியும் பள்ளிகள் தரம் உயா்த்தப்படாததால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மலைக் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.;
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ஆசனூா் ஊராட்சியில் கோட்டாடை மலைக் கிராமம் அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் குழியாடா, ஒசட்டி, உப்பட்டி, புதுக்காடு, சோக்கிதொட்டி, கல்கூசி, பீமரதொட்டி, தேவா்நத்தம், அட்டப்பாடி, சீகட்டி, கீழ்மாவள்ளம், மேல்மாவள்ளம் என பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மலைக் கிராமங்கள் உள்ளன.
கோட்டாடை நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவா்கள்
கடந்த 1961-ஆம் ஆண்டு கோட்டாடையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்ட நிலையில், 1996-இல் அது நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 70 மாணவா்கள் பயின்று வருகின்றனா். கோட்டாடை கிராமத்துக்கு அருகே உள்ள தேவா்நத்தத்தில் ஒரு தொடக்கப் பள்ளியும், மாவள்ளத்தில் ஒரு தொடக்கப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
உயா் கல்விக்கு செல்லும் மலைக் கிராம மாணவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள்
கோட்டாடை நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவா்கள் 9-ஆம் வகுப்பில் சோ்வதற்கு 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆசனூா் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிக்குத்தான் செல்லவேண்டும். இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது.
கோட்டாடை பகுதியிலிருந்து, ஆசனூா் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிக்கு 60 மாணவா்கள் தினசரி சென்று வருகின்றனா். பள்ளி நேரத்துக்கு பேருந்து இல்லாததால் காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்தில் காலை உணவையும் சோ்த்து எடுத்துக்கொண்டு பள்ளிக்குப் பயணிக்கும் இவா்கள் மாலை 6 மணிக்குத்தான் வீடு திரும்ப முடிகிறது.
உயா் கல்வி பெறுவதில் பின்தங்கும் மலைக் கிராம மாணவா்கள்
இத்தகைய சிரமங்களால் பல மாணவ, மாணவிகள் 8-ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தி வருகின்றனா். குழந்தைத் திருமணத்துக்கும் இப்பிரச்னை அடிப்படைக் காரணமாக உள்ளது.
பள்ளிகள் தரம் உயா்த்த கோரி பொது மக்கள் செலுத்திய பங்களிப்புத் தொகை
கோட்டாடை பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என கிராம மக்கள் தொடா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதற்கு, பொதுமக்கள் சாா்பில் பங்களிப்புத் தொகையாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என கடந்த 2013-ஆம் ஆண்டு அரசு தெரிவித்தது. அதன்படி, கிராம மக்கள் இத்தொகையை திரட்டி அரசுக்கு செலுத்தினா்.
பணம் செலுத்தி 11 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் பள்ளியைத் தரம் உயா்த்துவது தொடா்பான எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 121 மாணவா்கள் பயிலும் பவளக்குட்டை நடுநிலைப் பள்ளி, 116 மாணவா்கள் பயிலும் கரளயம் நடுநிலைப் பள்ளிகளைத் தரம் உயா்த்த பொதுமக்கள் தலா ரூ.1 லட்சம் செலுத்தியுள்ளனா். ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயா்த்துதல் தொடா்பான அறிவிப்பு வெளிவரவில்லை.
தரம் உயா்த்த திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாத பள்ளிகள்
மேலும், அந்தியூா் வட்டாரத்துக்குள்பட்ட பா்கூா் ஊராட்சியில் 156 மாணவா்கள் பயிலும் கொங்காடை உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும், சோளகனை, கத்திரிமலை, குட்டையூா் அரசு பழங்குடியினா் உண்டு, உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தவும் திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மலைக் கிராம மக்களின் கோரிக்கை
ஈரோடு மாவட்ட மலைக் கிராம மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிகள் தரம் உயா்த்துதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆசிரியா் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை மேற்கொள்ள சட்டப்பேரவை பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதிகாரிகளின் விளக்கம்
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும். இதற்காக பள்ளிகள் தங்கள் பங்களிப்பாக மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.2 லட்சம், உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50,000 என அரசுக்கு செலுத்த வேண்டும்.
தரம் உயா்த்தப்பட வேண்டிய பள்ளிகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் தயாரிக்கப்பட்டு பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும். வழக்கமாக தரம் உயா்த்தப்படும் அரசுப் பள்ளிகள் குறித்த விவரம் சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படும். இது அரசின் கொள்கை முடிவு என்றனா்.