ஈரோடு - சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றியமைக்க ஈரோடு எம்பி கோரிக்கை

ஈரோடு - சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றியமைக்க கோரி ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவை ஈரோடு எம்பி பிரகாஷ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2024-07-03 13:15 GMT

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பிரகாஷ் டெல்லியில் இந்திய ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்த போது எடுத்த படம்.

ஈரோடு - சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றியமைக்க கோரி ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவை ஈரோடு எம்பி பிரகாஷ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.பிரகாஷ், டெல்லியில் இந்திய ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹாவை சந்தித்து 2 மனுக்களை வழங்கினார்.

அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது, ஈரோட்டில் இருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் -22650) தற்போதைய நேரத்தால் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில்  எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.40 மணிக்கு வரும். பயணிகளுக்கு, குறிப்பாக ஈரோட்டில் இருந்து பயணிப்பவர்களுக்கு இது சவாலாக உள்ளது. 

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்தை இரவு 9 மணி நேரத்திற்குப் பதிலாக இரவு 10 மணிக்கு மாற்றியமைத்து, ஈரோட்டில் உள்ள பொது மக்களிடமிருந்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மற்றோரு மனுவில், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் போன்ற கோயில்களுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தற்போது ,தெற்கு ரயில்வே கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயில் எண் -12084 மற்றும் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் வரை ரயில் எண்- 12083 ஜனசதாப்தி இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் கொடுமுடி வழியாகச் செல்கின்றன.

எனவே, இந்த இரு ரயில்களும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டால், பக்தர்களுக்கு மட்டுமின்றி, கொடுமுடியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கும் ஆதரவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News