மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,109 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு
ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தாண்டு ரூ.1,109 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தாண்டு ரூ.1,109 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது:- ஈரோடு மாவட்டம் தொழில் வளங்கள் நிறைந்த மாவட்டமாகும். ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்க பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு ஜவுளி, விவசாயம், உணவு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் இலக்காக ரூ.840 கோடி நிர்ணயிக்கப்பட்டு முழுமையாக வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.1109 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட ரூ.269 கோடி அதிகமாகும். மேலும், பெற்ற கடனை முறையாக செலுத்துவதிலும் ஈரோடு மாவட்டம் தலைசிறந்து விளங்குகிறது. எனவே, மகளிர் சுயஉதவிக் குழு மூலம் கடனுதவியை பெற்ற மகளிர் தொழில் வாய்ப்புகளை பெருக்கி, தங்களது வாழ்வாதாரம் மேம்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த தொழில் முனைவோர்களான ஈரோடு வட்டாரம் கதிரம்பட்டி ஊராட்சியைச் சார்ந்த சரஸ்வதி என்பவரது காளான் வளர்ப்பு தொழில், பேரோடு ஊராட்சியைச் சார்ந்த நீவ லட்சுமி என்பவரது மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, பெருந்துறை வட்டாரம், சீனாபுரம் ஊராட்சியை சார்ந்த தனலட்சுமி என்பவரது பாக்குமட்டை தயாரிப்பு குறித்து கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம் புள்ளப்ப நாயக்கன் பாளையம் ஊராட்சியை சார்ந்த சுகந்தி என்பவரது சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்பு மற்றும் கோபி வட்டாரம், அயலூர் நாகமணி என்பவரது ஹாலோ பிரிக்ஸ் தயாரிப்பு போன்ற தொழில்கள் செய்து வந்த உறுப்பினர்களின் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) சதீஸ்குமார் உட்பட தொடர்புடையத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.