சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! காவல்துறை அதிரடி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த 12 சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த 12 சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வாகன பெருக்கத்திற்கேற்ப சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து கொண்டே வந்தது. சில பெற்றோர்கள் பெருமைக்காக தங்கள் பிள்ளைகளிடம் வாகனத்தைக் கொடுத்து ஓட்ட விட்டனர்.
மாணவர்கள் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 பேரை அமர்த்திக் கொண்டு வேகமாக செல்கின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். மேலும், வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட, வேகமாகச் சென்றனர். இதனால், சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வந்தன.
இதைத் தடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டி வந்த 3 இருசக்கர வாகனங்கள் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 4 இருசக்கர வாகனங்களுக்கு, பவானி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 5 இருசக்கர வாகனங்களுக்கும் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 12 சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திரும்ப பெற முடியும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் இதுவரை 12 சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.