தமிழகத்தில் காலி மது பாட்டில்கள் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய முடிவு

தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும் பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய முடிவினை கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.;

Update: 2024-07-05 17:30 GMT

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. அதன்படி, பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து மதுபான பாட்டில் வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வனப் பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த முறை செயல்பாட்டில் உள்ளது. சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் இந்த திட்டத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய பாட்டில் வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரில் தங்களையும் இணைக்க வேண்டும், டெண்டரில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டரில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ஆன்லைன் டெண்டர் முறை பின்பற்றப்படுகிறது. பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பாட்டில் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே டெண்டர் ஒதுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

தற்போது 10 மாவட்டங்களில் பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், 2024 செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு குறைகள் இருந்தால் அரசுக்கு மனு அளிக்கலாம். மேலும், புதிய டெண்டர் அறிவிப்பு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News