ஈரோடு கிழக்கு தொகுதியில் 2.26 லட்சம் வாக்காளர்கள்.. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 2.26 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Update: 2023-01-19 07:01 GMT

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் . இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி மனுத் தாக்கல் நிறைவடைகிறது. 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற 9 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலுக்குப் பிறகு மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன . இங்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆன் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் திருநங்கைகள் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் வழக்கம்போத இந்த தேர்தலிலும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.

தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்:

ஏற்கெனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கான தாலுகா அலுவலகங்களிலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையிலும் வைக்கப்பட்டிருந்தன.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகம் கிழக்கு தொகுதிக்கான தேர்தல் அலுவலக செயல்பட உள்ளது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் ஆகியவை ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஈரோடு மாநகராட்சி உட்பட அந்த தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அரசியல் கட்சிகள் சார்ந்த தலைவர்களின் பெயர்கள், படங்கள் அகற்றபட்டு வருகிறது. இந்த தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடங்கி உள்ளது. பழுது இருந்தால் அவை சரி செய்யப்பட்டு தேர்தலுக்கு பயன்படுத்த தயார் செய்யப்படும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சிவகுமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News