தமிழகத்தில் தண்டோராவிற்கு தடை போட்டார் தலைமை செயலாளர் இறையன்பு

தமிழகத்தில் தண்டோராவிற்கு தடை போட்டு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-08-03 10:15 GMT

தண்டோரா போடும் நபர் பைல் படம்.

மன்னர்கள் காலம் தொட்டு இன்றைய ஜனநாயக காலம் வரை தண்டோரா போட்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. பழங்காலத்தில் மன்னர்கள் நாட்டை ஆண்ட போது முக்கிய அறிவிப்புகளை முரசறைந்தும், தண்டோரா போட்டும் தான் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார்கள். அதற்கு காரணம் அந்த காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் இப்போது போல் இருந்ததில்லை.

ஆனால் விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்திலும் தண்டோரா போடுவது ஏன் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. தண்டோரா போடுவதற்கு என்று வறுமையில் வாடுபவர்களும், குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களும் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுவது உண்டு. இதனால் குறிப்பிட்ட சமூக மக்கள் அவமானம் அடைவதாகவும், இந்த முறைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை இப்பொழுது தமிழக அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு உள்ளது.


தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். இன்று அதிரடியாக ஒரு உத்தரவினை பிறப்பித்து உள்ளார். அந்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசின் முக்கிய அறிவிப்புகளை இனி தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக ஒளிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தலாம் .தகவல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் வளர்ந்து உள்ள இந்த காலத்தில் தண்டோரா போட்டு தான் அறிவிக்க வேண்டும் என்பது இல்லை ஆதலால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கிராம ஊராட்சிகள் வரை பரவ செய்ய வேண்டும். அரசின் இந்த உத்தரவை அமலுக்கு கொண்டு வர வேண்டும். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News