டயர் பற்றாக்குறையால் தீபாவளிக்கு பேருந்து சேவை பாதிக்காது: கூடுதல் தலைமைச் செயலாளர்

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தேவையான அளவு டயர்கள் இருப்பதால் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க முடியும் என கூடுதல் தலைமைச் செயலாளர் கூறினார்

Update: 2021-10-28 05:09 GMT

போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா 

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தேவையான அளவு டயர்கள் இருப்பதால் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க முடியும் என்றும், பேருந்து டயர் பற்றாக்குறையால் சேவை பாதிக்கும் என்று வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை எனவும், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தயானந்த் கட்டாரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், போக்குவரத்துக் கழகங்களின் தீபாவளி சிறப்பு பேருந்து சேவை டயர் பற்றாக்குறையால் பாதிக்கும் என்று தகவல்களில் உண்மை இல்லை. இது உண்மைநிலையை உறுதி செய்யாத செய்தியாகும்.

புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை, போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பேருந்துகளையும் இயக்கத் தேவையான அளவை விட அதிகமாக இருக்கிறது. எனவே தடையின்றி பேருந்துகளை இயக்க முடியும். 15 ஆயிரத்து 997 புதிய டயர்கள் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை வாங்கப்பட்டுள்ளன.

மேலும் ஆயிரம் டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த வாரம் அனுப்பப்பட்டு விடும். எனவே எந்த தடங்கலும் இல்லாமல் தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்களால் இயலும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களிடம் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்கத் தேவையான டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்கள், போதுமான அளவுக்கு இருப்பதால், தற்போதும், தீபாவளி பண்டிகையின்போதும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து மற்றும் , சிறப்பு பேருந்துகளை தடையின்றி இயக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News