வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்..!

பூந்தமல்லி அருகே வழி தவறி சென்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.

Update: 2024-05-18 03:45 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், ராஜூவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்( வயது 29), இவரது மனைவி பார்வதி( வயது 27) கணவன்,மனைவி இருவரும் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

வழக்கம் போல் இருவரும் வேலைக்குச்  சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இவர்களது குழந்தைகள் மகள் சங்கீதா( வயது 5), மகன் கவுதம்( வயது 4), ஆகிய இருவரும் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும் குழந்தைகள் கிடைக்காத நிலையில் பதறிப்  போய் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


இந்த புகாரின் பேரில் மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பூபதிராஜ் உடனடியாக காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், பிற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். பெற்றோர்களிடம் இருந்த காணாமல் போன சிறுவர்களின் புகைப்படங்களை வாங்கி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது அக்கா சங்கீதாவின் கையைப்  பிடித்துக் கொண்டு தம்பி நடந்து சென்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொண்டே சென்ற நிலையில் போரூர் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன இரண்டு குழந்தைகளையும் மீட்டு வைத்திருப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் மதுரவாயல் போலீசார் அங்கு சென்று காணாமல் போன குழந்தைகளை மீட்டுவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  போலீசார் விசாரணையில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் கடைக்குச்  செல்வதற்காக சிறுவர்கள் இருவரும் சென்றபோது வழி தெரியாமல் போரூர் ஆற்காடு சாலை வரை நடந்த சென்றது தெரிய வந்தது. 

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தது தெரியவந்தது இதையடுத்து சிறுவர்கள் இருவரும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காணாமல் போன சிறுவர்களை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News