அரியலூரில் ஏற்றுமதியாளர்களுக்கான வர்த்தக கருத்தரங்கு

அரியலூரில் ஏற்றுமதியாளர்களுக்கான வர்த்தக கருத்தரங்கை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-24 08:10 GMT

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு காசோலைகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழில் வணிகத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா வர்த்தக வாரத்தை முன்னிட்டு, ஏற்றுமதியாளர்களுக்கான வர்த்தக கருத்தரங்கத்தை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக தொழில் வணிகத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குண்டான வழிமுறைகள் குறித்தும், ஏற்றுமதி தொழிலில் ஈடுபடுவதற்கு அரசு வழங்கக்கூடிய சலுகைகள், ஏற்றுமதி பொருட்களுக்கு தேவையுள்ள இடங்கள் குறித்தும் தெரிந்துகொள்வதற்காக ஏற்றுமதி தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் நடத்தப்பட உள்ளது.

தொழில் துறையில் வளரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முன்உதாரணமாக விளங்குபவர்களின் அனுபவங்கள் தேவை. அதன் அடிப்படையில் இக்கருத்தரங்கம் மூலமாக அயல்நாட்டு வணிகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, தொழில் முனைவோர்களின் அனுபவங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் வங்கியின் பங்கு உள்ளிட்டவைகள் குறித்து தொழில் முனைவோர்கள் தங்களது அனுபவங்கள் தெரிவிக்க உள்ளனர். எனவே, இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ள தொழில் துறையில் வளரும் இளைஞர்கள் அனைவரும் இவர்களின் கருத்துக்களை கேட்டு, வருங்காலங்களில் நடைபெறவுள்ள இதுபோன்ற கருத்தரங்கில் உங்களது அனுபவங்களை புதிய தொழில்முனைவோர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்கள் சு.சுந்தர்ராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), எம்.சிவக்குமார்; (மகளிர்திட்டம்), மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஆ.லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News