உபயோகித்த பாட்டில்கள் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார்

அரியலூர் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

Update: 2022-08-27 09:59 GMT

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் உபயோகித்த தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் மறுசுழற்சி சேமிப்பு இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தொடக்கி வைத்தார்.


அரியலூர் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி  அறிவுறுத்தியுள்ளார்.

அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் உபயோகித்த தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் மறுசுழற்சி சேமிப்பு இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி  தொடக்கி வைத்தார்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே பொதுமக்கள் ஒருமுறை உபயோகப் படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழக அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலும் ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் செட்டிநாடு சிமெண்ட் தனியார் நிறுவனத் தின் சார்பில் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட உபயோகித்த தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் மறு சுழற்சி சேமிப்பு இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.

மேலும் தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மாற்றுப்பயன்பாட்டு பொருட்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியினை ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு வழங்கி, ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்திடவும், தூய்மைப்பணிகளை முழுமையாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட ஊராட்சித்தலைவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இந்த மறுசுழற்சி சேமிப்பு இயந்திரத்தில் பொதுமக்கள் தாங்கள் உபயோகித்த தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை போடுவதன் மூலம் மறுசுழற்சி செய்யப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவது தடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். எனவே, பொதுமக்கள் உபயோகித்த தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை பொது வெளியில் போடுவதை தவிர்ப்பதுடன், பிளாஸ்டிக் இல்லா அரியலூர் நகரை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, நகர்மன்றத் துணைத்தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் சித்ராசோனியா, செட்டிநாடு சிமெண்ட் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News