அரியலூர் அருகே தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்குகளை அகற்றக்கோரி தமிழ்ப்பேரரசு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2022-02-13 06:12 GMT

அரியலூர் அருகே தமிழ்ப்பேரரசு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தில், சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரி உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்ப் பேரரசு கட்சியினர் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்று புறம்போக்கு, கோயில் இடங்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கோட்டைக்காடு - பெண்ணாடம் வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். சோழன்குடிக்காடு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்துக்கு தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கவுதமன் தலைமை வகித்தார். திருச்சி மண்டலச் செயலாளர் முடிமன்னன், துணைச் செயலாளர் ராஜேந்திரன், அரியலூர் மாவட்டத் தலைவர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News