குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா: அரியலூர் எஸ்.பி. நடவடிக்கை

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுத்திட கடைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2021-12-23 10:05 GMT

அரியலூர் மாவட்ட கடைகளில் சி.சி.டி.சி. கேமரா பொருத்துவது பற்றி வியாபாரிகளுக்கு போலீசார் ஆலோசனை வழங்கினர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. பெரோஸ் கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர், செந்துறை, கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம் மற்றும் தளவாய் ஆகிய காவல் நிலையங்களில் சி.சி.டி.வி. பொருத்துவது குறித்து நகைக்கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கும் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களிடம் கடைகளில் அனைத்து இடங்களிலும் முன்புறம் மற்றும் பின்புறம் சி.சி.டி.வி. கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டது.

சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ள அனைத்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா நல்ல முறையில் இயங்குகிறதா என்று அடிக்கடி சோதனையிட வேண்டும் எனவும் அதற்கு ஏற்றார் போல் சேமிப்பு சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து கடைகளிலும் தரமான லாக்கர்களை பயன்படுத்த வேண்டும் எனவும், கடைகளுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்கள் இடமும் கண்டிப்பாக ஆதார் கார்டு மற்றும் ஏதாவது ஒரு ஐ.டி. ஆதாரங்களின் நகலை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடகு கடைக்கு அடிக்கடி சந்தேகநபர்கள் வந்தால் உடன் அவரைப்பற்றி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட குற்றச்சம்பவங்கள் சம்பந்தமான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News