ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை.

ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்து கொண்டார் அவரது உடலுக்கு அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-09-14 05:29 GMT

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் கருணாநிதி. இவரது மனைவி ஜெயலெட்சுமி இருவரும் வழக்கறிஞர் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்  உண்டு.

இவர்களது முதல் மகள் கயல்விழி இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார்.  இரண்டாவது மகள் கனிமொழி (17). இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றிருந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார்  பள்ளியில் பயின்ற கனிமொழி 12ம் வகுப்பில் 562.28 மதிப்பெண்கள் பெற்று 93 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். படிக்கும்போதே நீட்தேர்விற்கும் பயிற்சி பெற்று வந்துள்ளார். நேற்றுமுன்தினம் தஞ்சாவூரில் உள்ளி தனியார் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி மனஅழுத்தத்துடன் இருந்துள்ளார். இயற்பியல் மற்றும் வேதியியல் பாட கேள்விகள் கடினமாக இருந்தது என்று வேதனையுடன் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.  மாலையில் அரியலூர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்த தனது மனைவியை அழைத்துவர கருணாநிதி சென்றுள்ளார். கனிமொழி  மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது கனிமொழி தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து கனிமொழியின் உடலை கருணாநிதி தனது சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் உயிரிழந்த மாணவி கனிமொழியின் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

தற்பொழுது மாணவி கனிமொழியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விக்கிரமங்கலம் போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வால் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே குமுமூர் அனிதா, எலந்தங்குழி விக்னேஷ் தற்கொலை செய்து உள்ளனர். இந்நிலையில்  சாத்தம்பாடி கனிமொழியும் தற்கொலை செய்து இருப்பதால் இம்மாவட்டத்தில்  நீட்தேர்வு மூன்று மாணவ மாணவிகளின் உயிரை பலி வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News