அரியலூர் மாவட்டத்தில் 73 -வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாட்டம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை

Update: 2022-01-26 12:14 GMT

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி. 


அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73 வது குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து, சமாதான புறாக்களை பறக்கவிட்டு, காவல்துறையினர் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை 23 காவலர்களுக்கும், பேரிடர் மேலாண்மை மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, முன்னாள் படைவீரர் நலன், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 313 நபர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில், வடகிழக்கு பருவமழையினால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை காப்பாற்றியதற்காக உடையார்பாளையம் அடுத்த சாத்தம்பட்டி முருகன் என்பவருக்கும், கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூக்காயி என்பவரை காப்பாற்றிய திருமானூர் தீபன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும், கோடாலிகருப்பூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் மையப்பகுதியில் சிக்கிய 75 கால்நடைகளை மீட்ட ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறையைச் சேர்ந்த மோகன்ராஜ், ரவிச்சந்திரன், முத்துகுமார் ஆகியோருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட உதவி இயக்குநர் நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தடுப்பூசி செயல்படுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 52 ஊராட்சி மன்றத்தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினார்.

பின்னர், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா, மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னூலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை(அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News