சிறுபான்மையினர் சமூக பயனாளிகள் இலவச தையல் இயந்திரம் பெற வேண்டுகோள்

சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த பயனாளிகள் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் பெற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-01-08 13:12 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறுபான்மையின மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையங்களில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், சிறுபான்மையினரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிட ஆணை வரப்பெற்றதை தொடர்ந்து சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும்.

தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கவேண்டும். ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1,00,000/- ஆக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வரைக்குள் இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவனால் கைவிட்பபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருமுறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்களை பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண்.16-ல் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News