13 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் வெற்றி கோர்ட்டில் இழப்பீடு தொகை செலுத்திய தாசில்தார்

ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ரூ.49 ஆயிரம் இழப்பீடு தொகை யை செந்துறை தாசில்தார்செலுத்தினார்.

Update: 2022-12-21 07:02 GMT

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் கோப்பு படம்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. ஆசிரியர். இவர்13 ஆண்டுகளுக்கு முன் தங்களது பூர்வீகமான நிலத்தினை நான்கு புறமும் அளந்து அத்துக்காட்டுமாறு செந்துறை தாசில்தாரிடம் மனு கொடுத்து உள்ளார். ஆனால் அவர் அளந்து அத்துக் காட்டவில்லை.

அதனைத் தொடர்ந்து செல்வமணி அரியலூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2010 ல் தாசில்தார் உட்பட 7 பேர் மீது வழக்கு தொடர்ந்தார். 7 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 7.3.2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் செந்துறை தாசில்தார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்றும் அவர்தான் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அதனால் பாதிக்கப்பட்ட செல்வமணிக்கு இழப்பீடாக ரூபாய் 20 ஆயிரத்தை வழக்குத்தொடர்ந்த தேதியான 3.11.2010 ம் தேதி முதல் பணத்தை க்கட்டி முடிக்கின்ற வரையில் அசலுடன் 9 சதவீதம் வட்டியுடன், செலவுத்தொகையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து செல்வமணி செந்துறை நீதிமன்றத்தில் இழப்பீடு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா உடனடியாக செல்வமணிக்கு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்ட இழப்பீடு தொகையை செந்துறை தாசில்தார்  வழங்க வேண்டும் இல்லை என்றால் ஜீப் ஜப்தி செய்ய ப்படும் என்று தீர்ப்பளித்தார்.

அதனைத் தொடர்ந்து செந்துறை தாசில்தார், மனுதாரர் செல்வமணிக்கு வழங்க வேண்டிய 49 ஆயிரத்து 700 ரூபாய் இழப்பீடு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார். 13 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கில் மனுதாரரான ஆசிரியருக்கு நியாயம் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News