செந்துறை ஊராட்சி: வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-18 09:25 GMT

வளர்ச்சி திட்ட பணிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்திலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.

புதிதாக கட்டப்படும் இக்கட்டடத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த பயன்பெறுவார்கள். மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கூட்டுபண்ணையத் திட்டத்தின்கீழ் சன்னாசிநல்லூர் உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் கருவிகளையும், பயிர் விளைச்சல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நல்லநாயக்கபுரம் விவசாயி தனபால் என்பவருக்கு ரூ.15,000/-க்கான பரிசுத்தொகையையும், இரண்டாம் பரிசு பெற்ற விவசாயி வேல்முருகன் என்பவருக்கு ரூ.10,000/-க்கான பரிசுத்தொகையையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 487 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

தொடர்ந்து, செந்துறை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.43.91 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 13 தெருக்களுக்கான தார் சாலை அமைத்தல் பணி, முகப்பு வளைவு சீரமைத்தல், சமுதாயக்கூடம் சீரமைத்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் இரா.பழனிசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் வி.கருப்பசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News