அரியலூர் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் அரசு தலையிடக் கோரி அரியலூரில் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

Update: 2022-05-24 14:03 GMT

அரியலூர் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் துப்புரவு தொழிலாளர்கள், களப்பணியாளர்கள், சில்ட் (தூர்வாரும் )வண்டி ஓட்டுநர்கள், ஜெட் ராட்டிங் மற்றும் சூப்பர் சக்கர் வண்டி ஓட்டுநர்கள் - ஆப்ரேட்டர்கள் ஆகிய பணிகளில் 20 முதல் 30 வருடங்களுக்கு மேலாக தற்காலிக தொழிலாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். முழுநேர ஊழியர்களாக தொடர்ந்து பல ஆண்டுகள் பணியில் நீடித்தாலும், இன்றும் தற்காலிக ஊழியர்களாகவே உள்ளனர்

2017 ஆம் ஆண்டு அரசாணை,1982ம் ஆண்டு வெளியான சட்டத்தின்படி இத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும், நகராட்சி நிர்வாகத் துறையும் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. போராடத் தூண்டியுள்ளது.

ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இத்தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் தொழிலாளர்களை சென்னை பெருநகர கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் அழைத்துப் பேசி சுமுக தீர்வு காண்பதற்கு மாறாக மௌனம் காத்து வருகின்றனர். உடனடியாக தலையிட்டு சுமுக தீர்வுக்கு தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழகம் தழுவிய உள்ளாட்சித்துறை ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தையொட்டி மாவட்ட தலைநகர் அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்கத் தலைவரும் ஏஐடியுசி உள்ளாட்சி  சம்மேளன மாநில செயலாளருமான த.தண்டபாணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரா.சுப்பிரமணியன், ரெ. நல்லுசாமி, கு.சிவஞானம், மாரியப்பன், மா.ராமசாமி, அமிர்தவள்ளி, க. அஞ்சலை,அ.பொன்னம்மாள், கலையரசி,குருசாமி,ராமச்சந்திரன், அண்ணாதுரை, ஆறுமுகம், அருந்ததி, செல்லாயி, ரா.ராணி, சகுந்தலா , வீ. கலா , ரா. தனலட்சுமி , ராமதாஸ், ஆறுமுகம்,மோகன், முருகானந்தம், உட்பட நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News