சொத்து வரி உயர்வை கண்டித்து அரியலூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-05 09:01 GMT

அரியலூரில் சொத்து வரி உயர்வு கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சொத்து வரி உயர்வை கண்டித்தும், அ.தி.மு.க.அரசின் திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தாததை கண்டித்தும் அரியலூர் பேருந்துநிலையம் அருகில் இன்று அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சியில் தேர்தல் காலத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் பொய்யாக தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறி வருகின்றார்.

அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட மினிகிளினிக், பெண்களுக்கு வழங்கப்பட்டட மானிய விலையில் ஸ்கூட்டர், ஏழைமக்களின் சுமையை குறைக்க வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பலத்திட்டங்களை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறுத்தி மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது.

நகர்ப்புற தேர்தல் முடிந்தவுடன் சொத்து வரியை உயர்த்தி இருக்கிறார்கள். அதற்கு காரணம் மத்திய அரசுதான் என்று மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். சொத்து வரி உயர்த்தப்பட்டதை தி.மு.க. அரசு திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் அ,தி,மு,க, மக்களின் நலனுக்காக எப்போதும் பாடுபடும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. இளவரசன், ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாநில இளைஞரணி துணைசெயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட மகளிர்அணி செயலாளர் ஜீவாஅரங்கநாதன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஓ.பி.சங்கர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வெங்கடாஜலபதி, சிறுபான்.மை நலப்பிரிவு செயலாளர் அக்பர்ஷெரிப், விவசாயப்பிரிவு செயலாளர் சாமிநாதன், இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் செல்வம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News