தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்ய அழைப்பு

நரிக்குறவர் வகுப்பைச் சார்ந்த 18வயது முடிவடைந்த, 60வயதுமுடிவடையாத ஒவ்வொருவரும் நலவாரியத்தில் உறுப்பினராக தகுதி பெற்றவர்

Update: 2021-08-04 11:15 GMT

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்ய  அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ. ரமணசரஸ்வதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து  வெளியிட்ட  செய்திகுறிப்பில்,

நரிக்குறவர்களுக்கு கல்வி, மாற்றுத்தொழில் புரிவதற்கான உதவி மற்றும் பல்வேறு உதவிகள் வழங்குவதற்காக தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்த்து வாரிய உறுப்பினர்களுக்கு, இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போன்று, பல்வேறு நல உதவிகளும் வழங்கப்படவேண்டுமென்று அரசால் ஆணையிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நரிக்குறவர் வகுப்பைச் சார்ந்த 18 வயது முடிவடைந்த, 60 வயது முடிவடையாத ஒவ்வொருவரும் நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்றவர் ஆவர்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு, விபத்தினால் ஏற்படும் ஊனம் மற்றும் மரணத்திற்கான உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவைத் தவிர, இவர்கள் சுயதொழில் புரிய குடும்பத்தில் ஒருவருக்கு மானியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யவும், மேற்காணும் நலத்திட்ட உதவிகளைப் பெறவும், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News