அரியலூர் மாவட்ட நபார்டு வங்கி செறிவுசார் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

அரியலூர் மாவட்ட நபார்டு வங்கியின் செறிவு சார் கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

Update: 2021-11-25 05:08 GMT

அரியலூர் மாவட்ட நபார்டு வங்கி செறிவுசார் கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நபார்டு வங்கியின் செறிவு சார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

அப்போது  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது:-

அரியலூர் மாவட்டத்திற்கு 2022-23-ம் ஆண்டுக்கான நபார்டு வங்கி செறிவு சார் கடன் திட்ட மதிப்பீடு ரூ.3406 கோடி முன்னுரிமை வங்கிக் கடன்களாக வழங்க வாய்ப்புகள் இருப்பதாக அது விவரிக்கிறது. இந்த செறிவு சார் கடன் திட்ட அறிக்கை கூட்டுப்பண்ணை முறையில் விவசாய உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்டது.

மாவட்டத்தில் தற்போது உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள் விரிவாக்க சேவை மையங்களின் செயல்பாடு பெருகிவரும் தொழில்நுட்ப பரிமாற்றம் வங்கிகளின் நிதி ஆதாரம் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நபார்டு செறிவு சார் கடன் திட்ட அறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிடுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு விவசாயத்திற்கு வங்கி கடன்களுக்கு ரூ.2520 கோடி நிர்ணயிக்கப்படவுள்ளது.

இதில் ரூ.2019 கோடி குறுகியகால விவசாய கடனாகும். மேலும், வேளாண்மை சார்ந்த பணிகள், பண்ணை எந்திரமயமாக்கல், மின்சேமிப்பு சாதனங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நிதியாற்றல் கிடைக்க பெற்றுள்ளது. இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.886 கோடி என வாய்ப்புகள் இருப்பதாக அது விவரிக்கிறது.

இந்த திட்ட அறிக்கை மாவட்டத்தின் வளமையை மட்டுமே முன் நிறுத்தி தயாரிக்கப்படுகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்த திட்ட அறிக்கையை பின் புலமாக கொண்டு அடுத்த ஆண்டுக்கான அவர்களது கடன் திட்டங்களை தயாரிக்கும் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான பாரத ஸ்டேட் பாங்கு அந்த திட்டங்களை ஒழுங்கு முறைபடுத்தி மாவட்ட கடன் திட்டமாக தயாரித்து பின்னர் வெளியிடப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் செறிவு சார் கடன் திட்ட அறிக்கைகளை தயாரித்து அவைகளை ஒன்றிணைந்து மாநில திட்டமாக்கி, மாநில அரசு மற்றும் மாநில அளவில் உயர்வங்கி அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நபார்டு சார்பில் நடத்துவதால், வங்கி கடன்கள் அதிகரிப்புக்கு தடையாக இருக்கும் இடர்பாடுகள் விரிவாக விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது.

மேலும், சொட்டு நீர் பாசனம், தரிசு நில மேம்பாடு, பழப்பயிர் பண்ணைகள், மீன் வளர்ப்பு, ஊரக கிடங்குகள், கூட்டு பொறுப்புகள், குழுக்கள் அமைத்தல் போன்ற கடன் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்  என்றார். 

இக்கூட்டத்தில், திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) எம்.சிவக்குமார், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) நவீன்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோனல் பெனிடிக்ட், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லெட்சுமி, தாட்கோ பொது மேலாளர் மதன் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News