அரியலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூமி குளிர்ந்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2021-10-17 06:07 GMT

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக அரியலூர் தாலுகாவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அடுத்தடுத்த இரு தினங்களில் தொடர்ந்து 100 மில்லி மீட்டருக்கு மேல் நல்ல கனமழை பெய்தது.

சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையின் காரணமாக தெருக்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து நின்று நிதானித்து பெய்த தொடர் மழையின் காரணமாக பூமி நன்கு குளிர்ந்து தரையின் நீர்மட்டம் சமநிலை ஏற்பட்டதால் தொடர்ந்து பெய்து வரும் மழையில் ஏரி குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான ஏரிகளில் கடந்த பதினைந்து தினங்களில் பெய்த மழையின் காரணமாக 50 சதவீதத்திற்கு மேல் நீர்நிறைந்து உள்ளது.வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட விவசாய பயிர்களை மேற்கொண்ட விவசாயிகள், இந்தமழை பயிருக்கு ஊட்டத்தை அளிக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று அரியலூரில் 31.6மிமீ, திருமானூர் 22மிமீ, ஜெயங்கொண்டம் 18மிமீ, செந்துறை 3 மிமீ மழை பெய்துள்ளது.

அக்டோபர் மாதத்தின் சராசரி மழை அளவான 187.5மிமீ என்ற அளவையும் மிஞ்சி, கடந்த பதினைந்து தினங்களில் மட்டும் 213.2மிமீ மழை பெய்துள்ளது. மாதத்தின் இயல்பான மழை அளவைவிட அதிகமாக 15தினங்களில் மழை பெய்துள்ளது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழையின் இயல்பான அளவான 578.3மிமீ என்ற அளவைவிட பத்து தினங்களில் மட்டும் 213.2மிமீ மழை பெய்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நல்ல மழை எப்பொழுதும் இருக்கும். எனவே வரும் மாதங்களில் நல்லமழை பெய்தால் சராசரி மழையை விட அதிக மழை பெய்து, ஏரிகுளங்களில் அதிகஅளவு தண்ணீர் தேங்கி நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News