உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: கலெக்டர் அறிவிப்பு

இருப்பில் உள்ள பொட்டாஷ் உரங்களை பதுக்கி வைத்தாலோ, சில்லரை விலையை அடித்தல், திருத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது

Update: 2021-12-18 07:45 GMT

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா நெல் பயிருக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் மேலுரம் இடும் தருவாயில் உள்ளது. இது தவிர, கடலை, கரும்பு, உளுந்து, முந்திரி, காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்ற பயிர்களுக்கு மேலுரம் இடும் நிலையில் உள்ளது. மேற்கண்ட பயிர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கு தேவையான மொத்த உரங்கள் 4140 மெட்ரிக் டன் ஆகும். இதுவரை, 1340 மெட்ரிக் டன் பெறப்பட்டுள்ளது. தற்பொழுது யூரியா 599 மெட்ரிக் டன், டிஏபி 565 மெட்ரிக் டன், பொட்டாஷ் 75 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2173 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 405 மெட்ரிக் டன் என மொத்தமாக 3817 மெட்ரிக் டன் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பில் உள்ளது.

பொட்டாஷ் உரம் 50 கிலோ மூட்டை ஒன்றின் விலை 1040 ரூபாய் ஆகும். தற்பொழுது, பொட்டாஷ் உரத்தின் விலை 1700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள பழைய பொட்டாஷ் உரங்களை 1040 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். புதியதாக விலை உயர்த்தப்பட்ட பொட்டாஷ் உரங்கள் மட்டுமே 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். தற்போது இருப்பில் உள்ள பொட்டாஷ் உரங்களை பதுக்கி வைத்தாலோ, அதிகபட்ச சில்லரை விலையை அடித்தல் திருத்தல் அல்லது மையினால் அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

வேளாண்மைத்துறை அலுவலர்கள் உர ஆய்வின் போது, விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ள உரக்கடைகளுக்கு மொத்த விற்பனையாளர்கள் உரம் வழங்கக்கூடாது. அவ்வாறு உரம் வழங்கினால் உரக் கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உரங்களை பொறுத்தவரையில் விவசாயிகள் உரங்களை வாங்கும்பொழுது மூட்டையில் அச்சிடப்பட்ட விலைப்படி மட்டுமே வாங்க வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது வேறு இணைப்பொருள்களுடன் உரங்களை வாங்க கட்டாயப்படுத்தினாலோ உடனடியாக அந்தந்த வட்டார உர ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News