அரியலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை கருவி வசதி துவக்கம்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முழு உடல் பரிசோதனை திட்டம், குருதிவங்கி பகுப்புக்கருவியினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

Update: 2022-06-24 08:23 GMT

அரியலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை கருவி வசதியை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் குருதி வங்கியில் புதிதாக இரத்த அணுக்கள் பகுப்புக் கருவியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (24.06.2022) துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மற்றும் குருதி வங்கியில் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிதாக இரத்த அணுக்கள் பகுப்புக் கருவியின் செயல்பாட்டினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்றைய தினம் துவக்கி வைத்தார். முழு உடல் பரிசோதனைத் திட்டத்தில் பயனாளிக்கு பரிசோதனை அட்டையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

முழு உடல் பரிசோதனையில் அனைத்து இரத்தம், இ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை தொகுப்பாக பரிசோதனை செய்யப்படும். இதனை தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தால் ரூ.3750/- வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.250/- மட்டும் செலுத்தி பொதுமக்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்டு, பயன்பெறலாம்.

குருதி வங்கியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரத்த அணுக்கள் பிரிக்கும் கருவியில் சிவப்பணுக்கள், தட்டணுக்கள் நோயாளர் தேவைக்கேற்ப வழங்க இயலும். மேலும், மேம்படுத்தப்பட்ட ECRB II ICU வார்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட ICU படுக்கைகள், ஆக்சிஜன், மானிட்டர், வென்டிலேட்டர் ஆகியவை குறித்தும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் மரு.குழந்தைவேலு, நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், மலர்மன்னன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News