நகைகடையில் திடீர் ஐடி ரெய்டு- ரூ.50 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-31 08:30 GMT

அரியலூர் நகரில் பிரபல தனியார் நகைகடையில் இரண்டாம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 50 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் நகரில் சின்னக்கடை வீதியில் பிரபல தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களாக இந்த நகை கடையில் அதிக அளவில் மக்கள் நகைகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நகைகடைக்குள் புகுந்து சோதனை நடத்த தொடங்கினர். நள்ளிரவு நீடித்த இந்த சோதனை இன்று மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதனையடுத்து இரண்டு பைகள் மற்றும் ஒரு இரும்பு பெட்டியில் சுமார் 50 லட்சம் கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகள், கடை உரிமையாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 19 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் நகை கடையில் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பணம் கடந்த 2 நாட்களாக கடையில் நகை விற்பனை செய்த பணமா அல்லது தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்ட பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News