ஜல்லிக்கட்டில் நாட்டின காளைகளுக்கு மட்டுமே அனுமதி-அரியலூர் கலெக்டர்

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டின காளைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-24 05:08 GMT

ஜல்லிகட்டில் காளையை அடக்கும் காளையர்கள் (பைல் படம்)

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் அனுமதி பெற்று நடைபெற்றுவருகிறது. கால்நடை வளர்ப்போர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், நாட்டின காளைகள் என்பதற்கு அரசு கால்நடை மருத்துவர் மூலமாக மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் முற்றிலும் நாட்டின காளைகளாக இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டின காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். கலப்பின மற்றும் உயர் ரக காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது.

எனவே, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை வளர்ப்போர்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு நாட்டினம் என்பதற்கான தனிச் சான்றிதழை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி அரசு கால்நடை மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் இனி வருங்காலங்களில் பங்கு பெற முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News