அரியலூர் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த 125 வீடுகளை இடிக்கும் பணி தீவிரம்

அரியலூர் நகரில் நகரில் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த 125வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2022-04-04 09:51 GMT

அரியலூர் நகரில் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த 125வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.


அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 14வது மற்றும் 7வது வார்டுகளில் உள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரசநிலையிட்டான் ஏரிக்கரைமேல் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக 150க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பலமுறை ஏரிக்கரை ஆக்கிரமிப்பில் உள்ளனர் என்று கூறி இவர்கள் வசிக்கும் வீடுகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆனால் அரசியல் அழுத்தம் காரணமான வீடுகளை அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது உயர்நீதிமன்றம் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு வருவாய்த்துறையினர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே தமிழகம் முழுவதும் உள்ள வருவாய்த்துறையினர் மற்றத்துறைகளுடன் சேர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஆண்டிமடம் பகுதிகளில் ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வரத்துவாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாசில்தார்கள் மேற்கொண்டுள்ளனர்.


இதன்அடிப்படையில் அரியலூர் நகரில் குறிஞ்சான்குளம் மற்றும் அரசநிலையிட்டான் ஏரிக்கரைமேல் உள்ள 125 வீடுகளை அகற்றும்பணியில் தாசில்தார் ராஜமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் 100க்கும் மேற்பட்ட போலீசார், மின்சாரத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் ஆயிரங்கால் மண்டத்தையொட்டி, மற்றும் அதன் பின்னர் உள்ள கட்டிடங்களை அகற்றும்பணி தொடங்கியது. அவ்வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்புதெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்துகிறோம் என்று உறுதிபட கூறி அகற்றும் பணியை மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டத்தின் பலகிராமங்களிலும் இருந்து வந்த கிராமநிர்வாக அலுவலர்கள் விடுகளில் இருந்து பொருள்களை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டனர்.

இதனையடுத்து மூன்று ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் புல்டோசர் ஆகிய இயந்திரங்கள் மூலம் ஏரிக்கரையோரம் இருந்த வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. நாளையும் இப்பணி தொடரும் என்றும் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வீடுகளையும் அப்புறப்படுத்துவதோடு அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அகற்றப்படும் வீட்டு உரிமையாளர்களில் வீடு இல்லாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சமத்துவபுரத்திற்கு அருகில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News