அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-11-28 10:57 GMT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நிவாரண உதவிகள் வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்து வரும் கனமழையினால் நீர்நிலைகள் உயர்ந்து வருகிறது. அவ்வாறு நீர்நிலைகளில் மழைநீர் காரணமாக உயர்ந்து வரும் உபரி மழைநீரை ஏரியின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், தா.பழூர் ஒன்றியம், அரசுநிலையிட்டபுரம் கிராமத்தில் மருதையாற்றின் அதிகபடியான நீர் செல்லும் காரணமாகவும், நேற்று பெய்த கனமழையின் காரணமாகவும் மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி, வீடுகளை சூழ்ந்துள்ளதை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறையினரால் நீர்தேக்கத்தை தொடர்ந்து கண்காணித்திடவும், சீரான அளவில் உபரிநீரை வெளியேற்றிடவும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அரசுநிலையிட்டபுரம் கிராமத்தில்  சுமார் 15 வீடுகள் நீரினால் சூழப்பட்டுள்ளதையும், சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிர்கள் மழைநீரில் சூழ்ந்தும், சேதமடைந்துள்ளதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வெள்ளநீர்வடிந்தவுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள வேளாண் துறை அலுவலர்களை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதி மக்கள் விக்கரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு காலையில் வழங்கப்பட்ட உணவு குறித்தும், முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மழைநீரில் சேதமடைந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை வழங்கிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்தஆய்வின்போது, அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை, இணை இயக்குநர் (வேளாண்மை) பழனிசாமி, உதவிசெயற்பொறியாளர்கள் சாந்தி, வேல்முருகன், வட்டாட்சியர்கள் ஆனந்தன் (ஜெயங்கொண்டம்), ராஜமூர்த்தி (அரியலூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News