இணையம் மூலம் பணமோசடி செய்த நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்

காப்பீடு பெற்று தருவதாக கூறி இணையம் மூலம் பண மோசடி செய்த கர்நாடகத்தை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-13 14:33 GMT

கைது செய்யப்பட்ட நபருடன் போலீசார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணுப்பிள்ளை என்பவர், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தனது மொபைலுக்கு வந்த அழைப்பை நம்பி, 10 லட்சம் இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 30.03.2022 அன்று புகார் அளித்தார். இதன் பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டார். இவ்வழக்கின் குற்றவாளியை விரைந்து கைது செய்யுமாறு திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணன் சுந்தர் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக விசாரணை செய்தனர்.

விசாரனையில் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்திலுள்ள முல்பாஹால் என்ற கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் பெங்களூருவில் உள்ள FINE CAPITAL SOLUTION என்ற நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு மொத்தமாக காப்பீடு பெற்று தர கமிஷன் வேண்டும் என பாலிசிதாரர்களின் மொபைல் நம்பரை பெற்று செல்போனில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து வங்கிக் கணக்கு மற்றும் ஆன்லைன் மூலம் சிறிது சிறிதாக 10 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பூபாலனை இன்று கைது செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர் அவரிடமிருந்து 1,00,000/- ரூபாய் பணமும் 1,75,000 மதிப்புள்ள நகையும், இணைய மோசடிக்கு பயன்படுத்திய ஏடிஎம் கார்டு- 7, பேங்க் பாஸ்புக் - 03, செக்புக் -6, 2 -செல்போன்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் என மொத்தம் 4,69,000 மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டினார். உடன் இணைய குற்ற காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள். இணைய மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பூபாலனை நீதிமன்ற காவலுக்கு போலீசார் இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News