ஊழல் விவகாரம்: தி.மு.க.விற்கு சி.பி.எம். கட்சி மாநில செயலாளர் கேள்வி

முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவகாரம் குறித்து தி.மு.க.விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கேள்வி எழுப்பினார்.

Update: 2022-07-13 13:25 GMT

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாள் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாரத பிரதமர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏழை சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் மும்மடங்கு கேஸ் விலை ஏற்றப்பட்டுள்ளது. பருத்தி விலை உயர்வால் பல ஆலை தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவால் அங்கு மக்கள் புரட்சி ஏற்பட்டது போல், இந்திய பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள சீரழிவின் காரணமாக இந்தியாவிலும் அந்த நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாநில அரசின் பொறுப்பில் உள்ள பல்கலைக்கழகத்தின் அதன் துணைவேந்தராக உள்ள கல்வி அமைச்சருக்கும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், ஆளுநர் பட்டமளிப்பு விழாவை நடத்துவது கண்டனத்துக்குரியது. இது ஆளுநர் போட்டி சர்க்காரை நடத்துகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், அனைத்துக் கட்சிகளைக் கூட்டி, ஆளுநரை மாநிலத்தை விட்டு வெளியே செல்லுமாறு கோரி போராட்டம் நடத்தப்படும். 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய தி.மு.க, தேர்தல் பிரச்சாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நிலையில், தற்பொழுது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அவர்கள் நீதிமன்றத்தை நாடும் பொழுது தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. வலிமையான வாதங்களை முன்வைத்து நீதிமன்றத்தை நாடி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News