அரியலூரில் செஸ் ஒலிம்பியாட் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் இருசக்கரவாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கிவைத்தார்

Update: 2022-07-20 11:18 GMT

அரியலூரில் செஸ் ஒலிம்பியாட் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


சர்வதேச அளவிலான 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து மாவட்டங்கள் தோறும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே விழிப்புணர்வு பேரணி, வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டுதல், தன் புகைப்படம் எடுப்பதற்கான அமைப்பு துவக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி சத்திரம் தேரடி வழியாக அண்ணாசிலையில் நிறைவடைந்தது. இப்பேரணியில் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தலை கவசம் அணிந்து கலந்து கொண்டனர். இப்பேரணியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து ஒலிப்பெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாரத்தான் உள்ளிட்ட பிற விழிப்புணர்வு போட்டிகள் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்;.

முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்படுவதை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டார். மேலும், இக்குறும்படத்தினை அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பல்வேறு முக்கிய இடங்களில் தொடர்ந்து திரையிட மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இப்பேரணியில், வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News