அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு செயல்முறை விளக்க முகாம்

கடுகூர் கிராமத்தில் அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-11 11:45 GMT

அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு செயல்முறை விளக்க முகாம்.

அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கடுகூர் கிராமத்தில் அசோலா பசுந்தீவனம் வளர்ப்பு செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கடுகூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் குமார் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். எதிர்வரும் கோடைகாலத்தில் பசுந்தீவன பற்றாக்குறையை சமாளிக்கவும், பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தீவனச் செலவை குறைக்கவும் மற்றும் வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் அளிக்கவும் அசோலா பசுந்தீவனம் ஏதுவாக அமையும் என டாக்டர்.குமார் தெரிவித்தார்.

மேலும் அசோலா பசுந்தீவனம் உற்பத்திக்கு எந்த செலவும் இல்லை என்பதால் கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவு கட்டுப்படுத்தப்படும் எனவும், அசோலாவில் உள்ள அதிகப்படியான புரதச் சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், அடர் தீவனம் மற்றும் பிண்ணாக்கு போன்ற தீவனங்களில் உள்ள சத்துக்களை விட அதிகம் என்பதால் கால்நடைகள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார். அசோலா வளர்ப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள்,அசோலா திடல் அமைக்கும் முறை, அசோலா திடலை பாதுகாக்கும் முறைகள் மற்றும் கால்நடைகளுக்கு அசோலாவை தீவனமாக அளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த முகாமில் 15 பெண்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட கடுகூர் மற்றும் மணக்குடி கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் அசோலா பசுந்தீவன வளர்ப்பு குறித்த கையேடு வழங்கப்பட்டது. இந்த முகாமை கடுகூர் கிராம முன்னோடி விவசாயி திரு சஞ்சய் காந்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News