அரியலூரில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் முன் பதிவு செய்ய அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் முன் பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-06-22 12:12 GMT

குறுடவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் சேர்ந்து பயனடைய அழைப்பு விடுத்த அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி

2021ம் ஆண்டில் குறுவை பருவ நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியினை பெருக்கவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவும் குறுவை தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இத்திட்டம் டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்து குறுவை சாகுபடி செய்யும் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. குறுவை தொகுப்பு திட்டத்தில் விதை நெல், உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை விவசாயிகள் பயன்பெறலாம்.

குறுவை தொகுப்பு திட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு விதை நெல் 20 கிலோ 50 சதவீத மானிய விலையிலும், ரூ.1400 மதிப்புள்ள 20 கிலோ பசுந்தாள் உர விதைகளும், ரூ.2185 மதிப்புள்ள உரங்களான யூரியா 2 மூட்டை, டிஏபி 1 மூட்டை, பொட்டாஷ் அரை மூட்டையும் வழங்கப்படும்.

அரியலூர் மாவட்த்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் விதை நெல் 40 மெ.டன், 2600 ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் உரங்கள் மற்றும் 450 ஏக்கரில் பசுந்தாள் உர விதைகள் வழங்கிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட வேளாண் பொறியியல் துறை மூலம் பண்ணைக்குட்டைகள் உருவாக்கப்படும். இத்திட்டம் தொடர்பாக டெல்டா கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அல்லது பஞ்சாயத்து அலுவலகங்களில் வருகிற ஜீன் 24, 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் பயனாளிகள் தேர்வும் விண்ணப்பம் பெறும் முகாம் நடத்தப்படும்.

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் சாகுபடி சான்று ஆகியவற்றை உதவி வேளாண்மை அலுவலரிடம் அளித்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு அரியலூர், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலர், கோபாலகிருஷ்ணன் வாட்சப் எண் - 9566534432 -க்கு ஏதேனும் விபரங்கள் அல்லது குறைகளுக்கோ விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், திருமானூர் வட்டாரத்தில் கீழப்பழூவூரில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், தா.பழூரில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் மீன்சுருட்டி, துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் இத்திட்டத்திற்காக உதவி மையம் செயல்படும்.

இத்திட்டத்தில் சேர உள்ள டெல்டா பகுதி விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து பயன் பெற மாவட்டகலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News