அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியை மோடி காணொலி மூலம் இன்று திறந்தார்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2022-01-12 12:36 GMT

அரியலூரில் இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த அரசு மருத்துவ கல்லூரி.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கணொலி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

அரியலூரைச்சுற்றி உள்ள 7 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுவதாலும், மற்ற வாகனங்களால் ஏற்படும் விபத்துகளாலும் காயங்கள், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால், அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு அப்போதைய அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அரசின் ஒப்புதலுடன் 2020ம் ஆண்டு ஜூலை 7 ம் தேதி அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமடைந்து, தற்போது நிறைவை எட்டியுள்ளன.

தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய நிர்வாக அலுவலகம், தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் கூடிய கல்லூரி, மின்னியல் துறைகளுக்கான அலுவலகம், வங்கி, அஞ்சல் நிலையம், மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் கூடிய கட்டிடம், மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தரைத்தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட தனித் தனிக் கட்டிடம், பேராசிரியர்கள்,உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

உடற்கூறியல், உடலியங்கியல் மற்றும் உயிர் வேதியியில் ஆகிய 3 துறைகளைக் கொண்டு இயங்கக் கூடியதாக இந்த மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வகுப்பறை, ஆய்வகம், கணினி நூலகம் என அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, மருத்துவக் கல்லூரிகளுக்கான மத்தியக் குழு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாட்டைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இந்த மருத்துவக் கல்லூரி இன்று(ஜன.12) திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News