பெண் சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: அரியலூரில் பரபரப்பு

அரியலூரில் பெண் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-10 12:00 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி லட்சுமிபிரியா(30). அரியலூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் இவர், உயர்அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் கடந்த 5ம் தேதி முதல் 3 நாட்கள் விடுப்பு எடுத்ததாக தெரிகிறது. இதனால், அவரை திருச்சியில் பயிற்சி பெற்று வருமாறு காவல் துணைக்கண்காணிப்பாளர் கூறியதாகவும், அதற்கு அவர் அடுத்த முறை சென்று வருகிறேன் என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் மன உளைச்சலில் இருந்த லட்சுமிபிரியா நேற்று முன்தினம் செந்துறை சாலையில் வாகன தணிக்கையில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அருகிலிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பூச்சி மருந்து குடித்துள்ளதை கண்டறிந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அரியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், செந்துறை அடுத்த பூவாகம் பகுதியை சேர்ந்த காமராஜ் மனைவி பிரியங்கா(28). இவர் அரியலூர் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் உடையார்பாளையம் பகுதியில் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பெண் காவலர் பூச்சி மருந்து குடித்துள்ளதை உறுதி செய்தனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் அரியலூரில் 2 பெண் காவலர்கள் விஷ மருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News