அரியலூர்: 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் துவக்கம்

அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-09-05 11:01 GMT

மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (5.9.2022) சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் காணொலிக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் அண்ணலெட்சுமி ராஜபாண்டிய திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தில் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும். மாணவிகள் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு (Certificate Course), பட்டயப் படிப்பு (Diploma/ITI/D.TEd. Courses), இளங்கலைப் பட்டம் (Bachelor Degree B.A, B.Sc, B.Com, B.B.A, B.C.A, and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E, B.Tech, M.B.B.S, B.D.S. B.Sc. (Agri.)> B.V.Scm B.Fsc, B.L, etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.>) போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.

அந்த வகையில், இன்று முதற்கட்டமாக 67,000 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தில்லி முதலமைச்சர் ஆகியோர், சென்னையில், மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப் பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை வழங்கினார்கள்.

அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 740 மாணவிகளுக்கு வழங்கும் விதமாக அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 147 மாணவிகளும், ஜெயங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 83 மாணவிகளும், மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவிகளும், மார்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகளும், அன்னை ஞானம்மா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 28 மாணவிகளும், நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 32 மாணவிகளும், நெல்லியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவிகளும், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகளும், அரசு மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவிகளும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளும் என இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மொத்தம் 375 மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப் பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, துணைத்தலைவர் கலியமூர்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அம்பிகா இளையராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோனல் பெனிடிக் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News