அரியலூரில் நுகர்வோர் குறைதீர் ஆணைய மத்தியஸ்தர்களுக்கு பணி நியமன ஆணை

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மத்தியஸ்தர்களுக்கு நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

Update: 2022-08-01 10:49 GMT

அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மத்தியஸ்தர்களுக்கு நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


2019-ஆம் ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் சமரச மையம் இருக்க வேண்டும். இதற்காக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மத்தியஸ்தர் பணிக்கு விளம்பரம் செய்து விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதில் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஐந்தாண்டுகள் பணி புரிவதற்கான நியமன ஆணைகளை கடந்த வாரம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர்.வீ.ராமராஜ் பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (01.08.2022) நடைபெற்ற நிகழ்வில் அரியலூர் வழக்கறிஞர்கள் மோகன், கதிரவன், இளவரசன், தேவி, ஜெயங்கொண்டம் வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் சமூக சேவகர் லதா மற்றும் தணிக்கையளர் செல்வராஜ் ஆகியோருக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்ட ஆணைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர்.வீ.ராமராஜ் ஆகியோர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எம்.எஸ்.கலைவாணி முன்னிலையில் வழங்கினார்கள். மேலும், நியமன ஆணைகளை பெற்ற மத்தியஸ்தர்கள் பணி சிறக்கவும் வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்வின் போது அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி டாக்டர்.வீ.ராமராஜ் பேசும்பபோது

புதிதாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் சமரச முறைகள் குறித்த பயிற்சி வழங்கப்படும். வழக்குகளை விசாரிக்கும் முன்பு சமரச மையத்திற்கு அனுப்பப்பட்டு சமரசம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னையிலிருந்து அரியலூருக்கு மாற்றப்பட்ட வழக்குகளை இணையதள வழியில் விசாரிக்கும் முறை தற்போது அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அரியலூரில் ஆணையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தேவையான இடத்தை தேர்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News