கிரிக்கெட் வீரர்களை கேலிசெய்ததால் ஆத்திரம்; நண்பனை கொலைசெய்த வாலிபர்

Murder Case -கிரிக்கெட்வீரர்கள் விராத் ஹோலி, ரோகித் ஷர்மாவை திட்டியதால் ஆத்திரத்தில், நண்பரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-13 10:22 GMT

கொலை செய்யப்பட்ட விக்னேஷ் (கருப்பு பனியன் அணிந்திருப்பவர்) அடுத்த படம் - கொலையாளி தர்மராஜ் 

Murder Case -அரியலூர் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 'கிரிக்கெட் வீரர்களை திட்டியதால் கொலை செய்தேன்' என கைதான வாலிபர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம், மல்லூர் கிராமத்தில் இருந்து பொய்யூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. மல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள், இச்சாலை வழியாக தினமும் தங்களது வயல்வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று காலை அவ்வழியாக சென்ற பொது, மக்கள் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள திறந்தவெளியில் தலையில் பலத்த  காயத்துடன் ஆண் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கீழப்பழூவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  கீழப்பழூவூர் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு தலைமையிலான போலீசார், அந்த இடத்துக்கு வந்து வாலிபரின் சடலத்தை பார்வையிட்டனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த வாலிபர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மகன் விக்னேஷ் என்பதும், இவர் சிங்கப்பூருக்கு செல்வதற்காக மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, விசாவிற்காக காத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் நேற்று இரவு விக்னேஷ் ,செல்போனிற்கு வந்த அழைப்பின் பேரிலேயே, வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து விக்னேஷ் இறந்து கிடந்த இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், மது பாட்டில்களும் தண்ணீர் பாட்டில்களுடம் இருந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் பிரிவினரும், தடயஅறிவியல் பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். தடயஅறிவியல் நிபுணர்கள் மதுபாட்டில்கள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை சேகரித்துள்ளனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிதுதூரம்வரை சென்று நின்றுவிட்டது. இதனையடுத்து அப்பகுதியில் வாகனங்கள் வந்ததற்கான அறிகுறிகள் உள்ளனவா என்று போலீசார் விசாரனை நடத்தினர்.

உயிரிழந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து பொய்யூர் கிராமத்தில் இருந்து விக்னேஷின் உறவினர்களும், அக்கிராம மக்களும் சம்பவ இடத்தில் குவிந்தனர். விக்னேஷின் உடலைக்கண்ட உறவினர்கள் கதறிதுடித்தனர். மேலும் அருகில் உள்ள மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்தில் கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து போலிசார் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை கொண்டும், இறந்த வாலிபருக்கு செல்போனில் வந்த அழைப்பை கொண்டும் தீவிர விசாரனை செய்தனர். அப்போது இறந்த விக்னேஷின் நண்பரான தர்மராஜ் செல்போனில் அழைத்தது தெரியவந்தது. இதையடுத்து, தர்மராஜை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரனையில் நேற்று காலை தர்மராஜ், தனது அப்பா லோன் கட்ட கொடுத்த 2500 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு சென்றுள்ளார். பின்னர், அப்பணத்தில் மதுப்பாட்டில்களை வாங்கிகொண்டு ,தனது நண்பர்களான விக்னேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அனைவரும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பியபிறகு, மாலையில் மீண்டும் மது அருந்த தர்மராஜ் தனது நண்பரான விக்னேஷை அழைத்து சென்றுள்ளார்.

ஊருக்கு வெளிப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருவரும் மது அருந்திய போது, மறைத்து வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்த தர்மராஜ்,  விக்னேஷின் தலையில் இரண்டு முறை பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார் என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கிரிக்கெட் வீரர்கள் விராத் ஹோலி , மற்றும் ரோகித் ஷர்மாவை திட்டியதால் கொலை செய்தேன் என தர்மராஜ் காரணம் கூறியுள்ளார். இதனையடுத்து இது தர்மராஜ் கொலைக்கான காரணத்தை மறைப்பதாக நினைத்து அவரிடம் மேலும் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் விசாரணையில் விக்னேஷ், தர்மராஜின் திக்கு வாய் பேசுவதை அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். அதிலும் கிரிக்கெட் பற்றி பேசும் போது, 'உன்னைபோல் தான் உங்க ஆளும் இருங்காங்க,' என அடிக்கடி கிண்டலாக கூறிவந்ததால் திட்டம்தீட்டி கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

தனது குறைப்பாட்டை கிண்டல் செய்ததோடு, தனது அபிமான கிரிக்கெட் வீரர்களையும் குறைகூறியதால் ஆத்திரத்தில் கிரிக்கெட் மட்டையால், தனது  நண்பனையே அடித்து, படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News