மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Ariyalur Collector -காரணம் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு தாக்கல் செய்தவர் ரூ10,000 அபராதம் செலுத்த அரியலூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2022-10-12 08:33 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி.

Ariyalur Collector -அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சித்திடையர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது67). நிலங்களுக்கு பட்டா உட்பிரிவு செய்யவும் நில அளவை செய்யவும் சேவைக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் உட்பட மூவர் மீது இரண்டு வழக்குகளை அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு காரணமில்லாமல் மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ 10,000 அபராதம் செலுத்த உத்தரவிட்டது.

தீர்ப்பின் விவரம் வருமாறு:-

சித்திடையர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விவசாயம் செய்து வருவதால் அந்த நிலத்தை அளந்து காட்ட சிங்காரவேலு விண்ணப்பித்து சேவை கட்டணம் செலுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மனு கொடுத்தால் மட்டுமே நிலத்தை அளக்க முடியும் என்று செந்துறை வட்டாட்சியர் பதில் அனுப்பியுள்ளார். இதன்பின்பு சிங்காரவேலு செலுத்திய சேவை கட்டணம் ரூ 160 -ஐ திரும்ப தருமாறு கேட்டபோது அதனை தர இயலாது என வட்டாட்சியர் பதில் தெரிவித்து விட்டார். நிலத்தை அளவை செய்ய மறுத்து விட்டதாலும் செலுத்திய பணத்தை திரும்ப தராததாலும் அரியலூர் மாவட்ட ஆட்சியர், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர்மற்றும் செந்துறை வட்டாட்சியர் ஆகியோர் தமக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

செந்துறை வட்டாட்சியர் சேவை கட்டணத்தை மனுவுடன் பெற்றபின்னர் அதனை ஆய்வு செய்து இது தொடர்பாக மூன்று பதில்களை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பியுள்ளார். சிங்காரவேலுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பு அவர் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும். வட்டாட்சியர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தான் நுகர்வோர் ஆணையத்தை அணுக வேண்டும். வட்டாட்சியர் சேவை குறைபாடு புரியவில்லை. வட்டாட்சியருக்கு மனு அனுப்பி அதன் நகலை வருவாய் கோட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் சிங்காரவேலு அனுப்பியுள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் எந்த மனுவையும் அவர் அளிக்கவில்லை. அவரிடம் எந்த நிவாரணத்தையும் கேட்கவில்லை. ஆனால் வழக்கில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் எதிர் தரப்பினர்கள் காரணம் இல்லாமல் சேர்க்கப்பட்டு மூன்றாண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று உள்ளது. இதனால் சிங்காரவேலு வழக்கின் செலவிற்காக ரூ. 5000/-தை மாவட்ட ஆட்சியருக்கு 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப்போலவே மற்றொரு நிலத்தை உட்பிரிவு செய்து தருமாறு சிங்காரவேலு விண்ணப்பித்து சேவை கட்டணம் ரூ 40 -ஐ செலுத்தியுள்ளார். தேவையான ஆவணங்களை வழங்குமாறு செந்துறை வட்டாட்சியர் இதற்கு பதில் அளித்துள்ளார். இதிலும் அவர் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யாமல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கிலும் காரணமில்லாமல் அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரை எதிர் தரப்பினராக சேர்த்ததால்  மூன்று ஆண்டுகள் வழக்கு நடைபெற்று உள்ளது.  இந்த வழக்கு செலவிற்கும் சிங்காரவேலு ரூ. 5000/-தை மாவட்ட ஆட்சியருக்கு 4 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே பணம் செலுத்த உத்தர விட்டதை மறு பரிசீலனை செய்து அதனை ரத்து செய்யுமாறு சிங்காரவேலு மனு அளித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News