அரியலூர் அருகே 8அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுப்பு

கரையான்குறிச்சி கிராமத்தில் வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-21 07:12 GMT

அரியலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருமாள் கற்சிலை 

அரியலூர் மாவட்டம் கரையான்குறிச்சி கிராமத்தில் வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 8அடி உயரமுள்ள பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கரையான்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் ஏலாக்குறிச்சியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்துள்ளார். தனக்கு சொந்தமான 3சென்ட் இடத்தில் வீடு கட்டுவதற்காக, கடந்த இரண்டு தினங்களாக அஸ்திவாரம் தோண்டி வருகின்றார். 4அடி பள்ளம் தோண்டியபோது, கற்சிலை போன்று தென்பட்டதையடுத்து அதனை மேலே எடுக்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள் முற்பட்டனர். சுமார் 8அடி நீளத்தில் சிலை இருந்ததால் பொதுமக்களால் மேலே எடுக்க முடியவில்லை.


இது குறித்து அரியலூர் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணில் புதையுண்டு இருந்த சிலையானது மேலே எடுக்கப்பட்டதில், அது பெருமாள் சிலை என தெரிய வந்தது. அப்போது கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா, கோவிந்தா, எனக் கூறி இறைவனை வழிபட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிலையை சுத்தம் செய்து மாலையிட்டு தீபாராதனை காட்டினார். மேலும் சிலையானது முழுமையாக மேலே எடுக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலையிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் ஆராய்ச்சிக்குப் பின்னரே, கற்சிலை எந்த காலத்தை ஒட்டியது என்பது குறித்து தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News