அரியலூர் நகராட்சி தேர்தல் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

அரியலூர் நகராட்சி தேர்தல் தொடர்பான பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-02-17 14:07 GMT

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 19.02.2022 அன்று வாக்குப்பதிவும், 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதில், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு, வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையிலிருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் வழி, வார்டு வாரியாக வாக்கு எண்ணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமரும் இடம், தேர்தல் பார்வையாளர் அமரும் இடம், வாக்கு எண்ணிக்கை இடம், தேர்தல் முடிவு அறிவிக்கும் இடம், ஒலிப்பெருக்கி, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வரும் வழி மற்றும் அமரும் இடம், பாதுகாப்பு தடுப்பு கட்டைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்புவதற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை பார்வையிட்டு, வாக்குச்சாவடி வாரியாக அனுப்பும் வகையில் தயார் நிலையில் உள்ள வாக்குச்சாவடி பொருட்கள் குறித்து கேட்டறிந்து, உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வாக்குச்சாவடிகளுக்கு இப்பொருட்களை முறையாக அனுப்பவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, அரியலூர் நகராட்சி ஆணையர் த.சித்ராசோனியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News