வேட்பாளரின் டெபாசிட் தொகை - தலைசுற்றிய அதிகாரிகள்

Update: 2021-03-15 11:30 GMT

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரம் தனது டெபாசிட் தொகையை மண்பானையில் சில்லறைகாசுகள் மற்றும் நோட்டுகளுடன் வந்து மனுத்தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அகில இந்திய மக்கள்சேவை இயக்கத்தலைவர் சண்முகசுந்தரம் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு வந்தார். வரும்போது தனது கையில் மண்பானையை ஏந்தி வந்தார். இதனைக்கண்டு செய்தியாளர்கள் பார்த்தபோது மண்பானையில் சில்லறை காசுகளும், 500, 100, 50, 20, 10 ரூபாய் பழைய புதிய ரூபாய் நோட்டுகளும் கலந்து கிடந்தது. இதனையடுத்து அரியலூர் சட்டமன்ற தேர்தல் அலுவலர் ஏழுமலையிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர் டெபாசிட் தொகையை வழங்குமாறு அதிகாரிகள் கேட்ட போது தான் கொண்டு வந்த பானையில் இருந்து சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும் மேஜையில் எடுத்து வைத்தார். இதனையடுத்து மூன்று அதிகாரிகள் நோட்டுகளையும், சில்லறைகாசுகளையும் எண்ணி வரிசைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கால்மணிநேரம் எண்ணி முடித்த பிறகு 5721ரூபாய் மட்டுமே பானையில் இருந்துள்ளது. 

இதனையடுத்து தான் தனியாக வைத்திருந்த பணத்தில் இருந்து நான்காயிரத்து ஐநூறு ரூபாயை தங்கசண்முகசுந்தரம் தந்தார். இதனையடுத்து மீண்டும் கால்குலேட்டரில் பட்டனை தட்டிய அதிகாரிகள் அவருக்கு மீதம் எவ்வளவு தரவேண்டும் என்று கணக்கு பார்த்தனர். அதில் மீதி 221 ரூபாய் தரவேண்டும் என்று வந்தவுடன் பானையில் இருந்து பெறப்பட்ட தொகையில் இருந்து 221 ரூபாயை எடுத்து தங்க சண்முகசுந்தரத்திடம் தேர்தல் அதிகாரிகள் வழங்கினார்கள் .இதனால் வேட்புமனுத்தாக்கல் அரைமணிநேரத்திற்கும் மேல் நீடித்தது.

Tags:    

Similar News