அழிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

Update: 2021-02-18 08:30 GMT

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள பல்வேறு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகம் உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பு குழுத்தலைவர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறைத்தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை இயல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் சிவசுப்பிரமணியன் கூறும் போது தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை ஆகிய நான்கு பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் தற்போது காணப்பட்டு வருகிறது. லடாக் பகுதியில் அதிக அளவில் உள்ள வரித்தலைவாத்து இங்கு அதிகளவில் காணப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் கடந்த ஆண்டை விட தற்போது அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனக் கூறினார். தண்ணீரை முறையாக பராமரித்து சேமித்து வைத்திருந்தால் பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும் எனவும் கூறினார்.

Tags:    

Similar News