முள் படுக்கையில் பெண் சாமியார்- அருள் வாக்கு- இது திருபுவனத்து அதிசயம்

திருபுவனத்தில் முள் படுக்கையில் அமர்ந்து பெண் சாமியார் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறுவது அதிசயமாக கருதப்படுகிறது.

Update: 2024-01-05 11:10 GMT

முள் படுக்கையில் பெண் சாமியார் நாகராணி.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் பகுதியில் உள்ளது முத்துமாரியம்மன் கோயில். இங்கு வருடந்தோறும் மார்கழி மாதத்தில், நாகராணி என்ற பெண் சாமியார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வார். இவருக்கு 58 வயதுக்கு மேல் ஆகிறது.

பிரத்யேகமான காடுகளில் இருந்து உடை முள், இலந்தை முள், காட்டு கருவேல முள் உள்ளிட்ட ஏழு வகையான முட்கள் கொண்டு முள்படுக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த முட்களை கொண்ட, 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு மெத்தை போல முள்படுக்கை அமைப்பார்கள். இதற்காக பிரத்யேக பூஜையும் செய்யப்படும். பிறகு, பூஜை செய்த நீரை இந்த படுக்கை மேல் தெளித்து விடுவார்கள். இந்த முள் படுக்கையில் ஏறுவதற்கு வசதியாக, ஒரு மர ஏணியும் அமைக்கப்படும். பிறகு, முள் படுக்கைக்கு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்படும். முள் படுக்கையை 3 முறை வலம் வந்து மர ஏணியில் ஏறி நாகராணி ஆடுவார். பிறகு திடீரென்று முள் படுக்கையில் சாஷ்டாங்காக மல்லாக்க படுத்துவிடுவார்.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கூட, ஆடாமல் அசையாமல் நாகராணி தவத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.இதற்கு பிறகுதான் ஒவ்வொரு பக்தர்களாக அருள் வாக்கு கேட்டு செல்வார்களாம். திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நாகராணி அருள்வாக்கு சொல்லி வருகிறார். இறுதியாக தீபாராதனை காட்டிவிடுவார்கள். தீபாராதனை காட்டிவிட்டால், சாமி மலையேறிவிட்டதாக அர்த்தமாம். இதையடுத்து, நாகராணி கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்.

வருடாவருடம் இந்த நிகழ்வை காணவும், இவரிடம் ஆசிபெறவும், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்..

இந்த கோயிலின் உரிமையாளரும் இவர்தான். சின்ன வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருபவர். கடந்த 45 வருடங்களாக, ஒவ்வொரு மண்டல பூஜை அன்று 48 நாட்கள் விரதம் இருந்து இப்படி முள்படுக்கையில் அமர்ந்தும், நின்று கொண்டும், ஆடியபடியும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது இவரது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும், அதாவது, கோயில் மண்டல பூஜை கார்த்திகை கடந்த 1-ம் தேதி தொடங்கிய நிலையில், தினமும் பூங்காவனம் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பிறகு, நாகராணி காப்புக் கட்டி விரதமும் இருந்தார்.  கோயில் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த 7 அடி உயர கருவேலம், இலந்தை, கற்றாழை உள்ளிட்ட பல வகை தாவரங்களின் முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு சொன்னார் நாகராணி.

முன்னதாக, முள் படுக்கைக்கு பூஜை செய்து, நாகராணியை முள்படுக்கைக்கு அழைத்து வந்தார் பூசாரி மாரிமுத்து சுவாமிகள். அப்போது அருள் வந்து ஆடியபடியே வந்த நாகராணி, முள் படுக்கையில் ஏறி நின்று மீண்டும் ஆடியபடியே, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மயங்கியபடியே அதே முள் படுக்கையில் படுத்துவிட்டார். இப்படியே 3 மணிநேரம் முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார்.

அப்போது அவர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார்.. இதையடுத்து, அன்னதானமும் நடந்தது. இந்த சம்பவம் திருபுவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்றாலும், "இந்தம்மா சொல்றது எங்களுக்கு அப்படியே நடக்கிறது" என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள். இதன் காரணமாக பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News